அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை குறித்து தெளிவற்ற குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளை மாளிகை தலைமை மருத்துவரும், வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியும் முரணான தகவல்களை கூறியுள்ளனர்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் ராணுவத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பேசிய வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் சீன் கோன்லி டிரம்பின் ரத்த ஆக்சிஜன் அளவு இரண்டு முறை குறைந்ததாகவும் இதனால் அவருக்கு வெளியிலிருந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை டிரம்ப்பிற்கு கடுமையான காய்ச்சல் இருந்தாகவும், ரத்த ஆக்சிஜன் அளவு 94 என்ற அளவிற்கு கீழ் குறைந்து இருந்ததாகவும் சீன் கோன்லி தெரிவித்தார். ஆனால் சிகிச்சைக்கு பின் டிரம்பின் உடல் நிலை மேம்பட்டுள்ளதாகவும் இன்றே அவர் வெள்ளை மாளிகை திரும்ப வாய்ப்புள்ளதாகவும் சீன் கோன்லி தெரிவித்தார். இரு நாட்களுக்கு முன் பேசிய வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் ட்ரம்ப்பின் முக்கிய மருத்துவ காரணிகள் கவலை தரும் விதத்தில் இருப்பதாகவும் ,அடுத்த 48 மணி நேரம் அவர் உடல்நிலை மிகவும் கவலைமிக்கதாகவும் இருக்கும் என்றும் கூறியிருந்தார். எனினும் அடுத்த ஒரு மணி நேரத்தில் பேசிய அவர் டிரம்ப் மிக நன்றாக இருப்பதாக தெரிவித்தார். மீடோஸ் முதலில் தெறிவித்த தகவல் குறித்து டிரம்ப் அதிருப்தி அடைந்ததாக சில அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தெரிந்தபின் மீடோஸ் வேறு மாதிரி கூறி விட்டார் என்றும் அவர்கள் விளக்கினர். இதற்கிடையில் டிரம்ப்பிற்கு கடந்த வெள்ளிக்கிழமை மூச்சுத்திணறல் இருந்ததாகவும் இதன் காரணமாகவே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சிலர் தெரிவித்தனர். ஆனால் டிரம்பிற்கு மூச்சுத்திணறல் இருப்பதாக வெளியான தகவலை வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் சீன் கோன்லி மறுத்துள்ளார். டிரம்பிற்க்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள் அவர் உடல்நிலை குறித்த தகவல்களை ஒளிவு மறைவு இல்லாமல் நேர்மையாக தர வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெளோசி வலியுறுத்தியுள்ளார்.