தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்தி பிறந்த தினமான அக்டோபர் இரண்டாம் நாள் ஆண்டுதோறும் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். கிராமசபை கூட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் ஊராட்சி மன்ற தலைவருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் கொரோணா பரவலை காரணம் காட்டி கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் திடீரென அறிவித்தனர். எனினும் பல இடங்களில் தடையை மீறி கூட்டங்கள் நடத்தப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம் ஜமீன்கொரட்டூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மு க ஸ்டாலின் பங்கேற்று கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது பேசிய அவர் கொரோணா அஜித்தை காரணம் காட்டி கிராம சபைக் கூட்டத்திற்கு தடை விதிக்கிறார்கள் என்றால் அதிமுக செயற்குழுக் கூட்டத்தை கூட்டிய போது கொரோணா பரவாதா என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் அவர் கொரோணாவை பார்த்து பயப்படுவதை விட ஸ்டாலினை பார்த்து தான் எடப்பாடி அரசு பயப்படுகிறது என்றும் அவர் கூறினார். கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என விளக்கமளித்திருக்கும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக செயற்குழு கூட்டம் கொரோணா பரவல் தடுப்பு வழிமுறைகளுடன் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.