ஹத்ராஸ் பாலியல் சம்பவம் போன்று பட்டியலினத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரக்கூடிய சூழலில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையம் நான்கு மாதங்களுக்கு மேலாக தலைவர் மற்றும் துணைத்தலைவர் இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயதான பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

பொதுவாக பட்டியலினத்தவர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் நடைபெறும் போது தேசிய பிற்படுத்தப்பட்டோர் பழங்குடியினர் நல ஆணையம் தான் முதலில் கையில் எடுக்கும். சம்பவம் நடைபெறும் மாநில அரசுகளிடமிருந்து விளக்கங்களை பெறவும் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தவும் , நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் இந்த அமைப்புக்கு அதிகாரம் உள்ளது. பாதிக்கப்படும் மக்கள் சம்பந்தப்பட்ட காவல் துறையின் மீது நம்பிக்கை இல்லாத சூழலில் நேரடியாக இந்த ஆணையத்தில் புகார் பதிவு செய்து தங்களுக்கான நியாயத்தை பெறலாம். இப்படி பட்டியலின மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ஆணையம் கடந்த நான்கு மாதங்களாக தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.

இது குறித்து கடுமையாக சாடியுள்ள இந்த ஆணையத்தின் முன்னாள் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிஎல் குனியா மத்திய அரசு எந்த அளவிற்கு பட்டியலின மக்களுக்கு எதிரான மன நிலைவுடன் செயல்படுகிறது என தெரியவந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் நிதியமைச்சர் பார் ப.சிதம்பரமும் தேர்தல் அறிக்கையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பிற்காக அதிக பட்ச கவனம் செலுத்தப்படும் என உறுதியளிக்க பாஜக தேசிய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையத்தின் தலைவர் பதவியை காலியாக வைத்திருப்பது ஏன் என வினவியுள்ளார்.