கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மீண்டும் ஹத்ராஸிற்கு செல்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட பட்டியல் இன பெண் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரை அம்மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவின் போது ராகுல்காந்தி நிலைதடுமாறி கீழே விழ சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சில மணிநேரத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஹத்ராஷிற்கு மீண்டும் செல்ல உள்ளனர்.