மதுரையில் அலங்காநல்லூர் பகுதியில் மத்திய அரசின் தனிநபர் கழிவறை அமைக்கும் திட்டத்தில் ஒரே பயனாளிக்கு 4 கழிவறைகள் கட்டியதாக கணக்கு காட்டி புகார் எழுந்துள்ளது. அச்சம்பட்டி ஊராட்சியில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 2014 முதல் 2017 வரை 151 பயனாளிகளுக்கு கழிவறை கட்ட தலா 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.

இதில் ஒரே தம்பதியினரின் பெயரில் மூன்று நான்கு முறை கணக்கு காட்டி லட்சக்கணக்கான பணம் மோசடி செய்திருப்பது தெரிய தெரியவந்துள்ளது. ஒரே தம்பதியின் பெயரில் வரிசை எண் மாற்றி அடுத்த வரிசையில் அதே தம்பதியினரின் பெயர்களை ஆங்கிலத்தில் அடுத்த பயனாளியாக மோசடி செய்து பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஒரு தவணை மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒரே தம்பதியினரின் பெயரில் போலியாக ஆவணங்கள் தயாரித்து மீண்டும் மீண்டும் 12 ஆயிரம் ரூபாய் நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்று கையாடல் செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் செல்ல துரையிடம் கேட்டபோது இது குறித்த புகார் வரவில்லை எனவும் உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.