2ஜி வழக்கில் ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து சிபிஐ அமலாக்கத் துறையும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் மீது தினசரி விசாரணை தொடங்கியது. 2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐயும் அமலாக்கத் துறையும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.

இந்த வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதால் தினந்தோறும் விசாரிக்க கோரி வழக்கு தொடர்ந்தன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் திங்கள் முதல் தினந்தோறும் வழக்கு விசாரணை நடைபெறும் என கடந்த வாரமே உத்தரவிட்டிருந்தது. அதன்படி விசாரணை தொடங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்களான அஷிப் ஹால்வா சாஹித் ஹால்வா தரப்பின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் வாதங்களை முன்வைத்தார். தங்கள் தரப்பினருக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதித்தது யார் என்ற ஆவணங்களை இதுவரை விசாரணை அமைப்புகள் காட்டவில்லை என்று அவர் கூறினார்.

மேல்முறையீடு செய்ய ஒப்புதல் அளித்த கடிதம் அலுவல் ரீதியான உத்தரவு என்றும் அதை எதிர் தரப்பிற்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த வழக்கறிஞர் விஜய் அகர்வால் வழக்கறிஞர் என்ற முறையில் அந்த கடிதத்தை தான் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை அடுத்து வழக்கின் விசாரணை நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.