பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக தலைவர் எல். முருகனுக்கும் , திமுக எம்பி கனிமொழிக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது. கனிமொழி விசாரிக்கப்பட வேண்டியவர் என முருகன் வலியுறுத்த விசாரணைக்கு தயக்கமில்லை என பதிலளித்துள்ளார் கனிமொழி. சமூக நீதிக்காக போராடிய போராடியவர் பெரியார் என்றும் அவருக்கு வாழ்த்து கூறுவதில் தங்களுக்கு தயக்கமும் இல்லை என்றும், அண்மையில் பெரியாரின் பிறந்த நாள் அன்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.

பெரியார் சமூக சீர்திருத்தவாதி என்றும் அவருடைய நல்ல கொள்கைகள் எடுத்துக் கொள்வோம் என்றும், அதுபோல அவர் கடவுள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எல்.முருகன் தெரிவித்திருந்தார். பெரியார் குறித்த எல்.முருகனின் கருத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ள திமுக எம்.பி கனிமொழி திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு இதுதான் பெரியாருக்கு அவர்கள் காட்டும் மரியாதையா என கேள்வி எழுப்பியுள்ளார். கனிமொழியின் இந்த கேள்வி அரசியல் உள்நோக்கம் கொண்டது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பெரியார் சிலை அவமதிப்பு இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அறிக்கையில் கனிமொழி இப்படிக் கூறியிருப்பது பெரியார் சிலை அவமதிப்பு திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாக குறிப்பிட்டுள்ளார். திமுக எம்.பி கனிமொழியை விசாரித்து உண்மையை அறிய வேண்டும் எனவும் அநாகரிக செயலில் பின்னால் யார் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே எல்.முருகனின் கருத்து குறித்து பதிலளித்துள்ள திமுக எம்.பி கனிமொழி தமது கருத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் தன்னை விசாரிப்பதில் எந்தவித தயக்கமும் இல்லை எனவும் கூறினார். எல்.முருகன் தனிப்பட்ட முறையில் கூறிய கருத்தை பாஜகவின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கனிமொழி தெரிவித்தார்.