பொது முடக்க தளர்விற்குப் பிறகு திறந்து நான்கு நாட்களாகியும் கூட வணிக வளாகங்கள் வாடிக்கையாளர்கள் வரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன. நான்காம் கட்ட பொது முடக்க தளர்வுகளில் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து ஐந்து மாதங்களுக்கு பிறகு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் மால்கள் திறக்கப்பட்டன. சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ , சிட்டி சென்டர், ஸ்பென்சர் பிளாசா, பீனிக்ஸ் மால், ஃபோரம் என பத்திற்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன.

எல்லாம் மால்களும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் செயல்படத் தொடங்கி விட்டாலும் கூட பொதுமக்கள் யாரும் வருவதற்கு ஆர்வம் காட்டவில்லை. வழக்கமாக வரக்கூடிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது தற்போது 10 சதவீதம் பேர் மட்டுமே வருவதாக தெரிவிக்கிறார்கள் வணிக வளாக நிர்வாகிகள். மால்களுக்கு வழக்கமாக 40,000 முதல் 50,000 வாடிக்கையிளர்கள் வரை வருவார்கள் என்றும் ஆனால் தற்போது 4000 முதல் 5000 வரை மட்டுமே வாடிக்கையாளர்கள் வருவதாக நிர்வாகிகள் கூறுகிறார்கள். கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தாலும் கூட கொரோனா பரவல் இருப்பதால் பொதுமக்கள் வருவதற்கு தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது.

பொது முடக்க தளர்விற்குப்பிறகு பொதுமக்கள் வணிக வளாகங்கள் வருவதற்கு சற்று தயக்கம் காட்டுவதாகவும் தெரிகிறது. ஆனால் அது இன்னும் ஒரு வாரத்தில் சரியாகி விடும் பழைய நிலை திரும்பும் என்றும் வணிக வளாக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். மால்களில் உள்ள திரையரங்குகளை திறக்க அனுமதித்தால் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும் என்பது வணிக வளாக நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது. பெரும்பாலான ஐடி பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதால் சென்னையில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் இங்கே வரக்கூடியவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.