இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கிடையேயான பிரச்சனையை தீர்ப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பேச்சுவார்த்தை நடத்த தான் திட்டமிட்டிருப்பதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையேயான பிரச்சனை தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் ராஜபக்சேவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே கடந்த சனிக்கிழமை இணையவழிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சில் கலந்துரையாடிய விவரங்கள் குறித்த செய்தியாளர் சந்திப்பு கொழும்புவில் நடைபெற்றது. அப்போது டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கூறினார்.

இந்தியாவினால் அறிமுகம் செய்யப்பட்ட 13 ஆவது சட்ட திருத்தத்தை ரத்து செய்வதற்கு ஒரு போதும் இலங்கை அரசு அதிகாரபூர்வமாக தீர்மானிக்கவில்லை என்று கூறிய டக்ளஸ் தேவானந்தா இலங்கை தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட 13 ஆவது சட்ட திருத்தத்தின் அவசியத்தை இந்திய பிரதமர் மோடி இலங்கை பிரதமர் ராஜபக்சேவிடம் எடுத்துரைத்ததாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.