நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவராகி பல உயிர்களை காக்க வேண்டும் என்ற கனவோடு இருந்த விக்னேஷ் இன்று உயிரோடு இல்லை. அரியலூர் மாவட்டம் இளந்தங்குளி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் -தமிழ்ச்செல்வியின் விக்னேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1006 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார்.

அதன் தொடர்ச்சியாக கேரளா மற்றும் துறையூரில் தீவிரமாக நீட் தேர்விற்கு பயிற்சி பெற்று இருமுறை தேர்வும் எழுதியுள்ளார். ஆனால் அதில் ஒரு முறை தோல்வியை சந்தித்த விக்னேஷ் மற்றொரு முறை தேர்ச்சி பெற்றும் மருத்துவ சீட்டு கிடைக்கவில்லை . அதைத் தொடர்ந்து கொரோனா காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்படும் என பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் வரும் 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் இம்முறை நீட் தேர்வு எழுதுவது குறித்து மாணவர் விக்னேஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் , அதிகாலை முதல் காணாமல் போனதாக கூறுகின்றனர் அவரது உறவினர்கள். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்த நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக விக்னேஷ் மீட்கப்பட்டார். பல கனவுகளோடு இருந்த மாணவரின் உயிர், நீட் தேர்வால் போனதை ஏற்க முடியாத அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.