Wednesday, September 30, 2020

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை



வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. ஐந்து மாவட்டங்களில் இன்னும் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. தலைநகரான சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

கோயம்பேடு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆல்வார்பேட்டை, அடையாறு, நுங்கம்பாக்கம், பெசன்ட் நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் மழை பொழிந்தது. ஆவடி, அம்பத்தூர், மணலி, மாதவரம், செங்குன்றம் போன்ற சென்னையின் புறநகர் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது. சேலம் மாவட்டம் ஓமலூர் காடையாம்பட்டி தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. நீர்நிலைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் , திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் தொடங்கிய மழை இரவு முழுவதும் பெய்துவந்தது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக மழை பெய்தது. மயிலாடுதுறை, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.திருப்பூர் மாவட்டம் அவிநாசி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் பலத்த மழை பெய்தது. காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி ஈரோடு அரியலூர் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்தது. மயிலாடுதுறை அருகே மழையால் வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின்சார கம்பியை விவசாயி குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குருவை பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி , வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை சிவகங்கை கரூர் திருச்சி சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Pages