ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகள் வரும் 19-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான அட்டவணையும் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. இந்த நிலையில் தற்போது நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் யார் அதிக ரன் குவித்து அதற்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றுவார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. காரணம் ஐபிஎல் போட்டிகள் பேட்ஸ்மேனுங்களுக்கானது. குறைந்த பால் களில் அதிக ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் பேட்ஸ்மேன்கள் போட்டாபோட்டி கொண்டு பந்துகளில் துவம்சம் செய்வர். அதனால் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் ஆனால் அரபு நாட்டில் அமைந்துள்ள மைதானம் ஸ்பின்னர்களுக்கானது என்று சொல்லப்படுகிறது.

இதனால் இம்முறை ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றுவது பேட்ஸ்மேன்களுக்கு அதிக சவால் இருக்கும் என தெரிகிறது. இந்தநிலையில் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்ற வாய்ப்புள்ள வீரர்களின் பட்டியலை ஹிந்துஸ்தான் டைம்ஸ் அட்டவணைப்படுத்தி உள்ளது. ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடும் டேவிட் வார்னர் இவ்வகையான மைதானத்தில் விளையாடுவதில் வல்லவர் என சொல்லப்படுகிறது. அவரது பவர் சாட்கள் மற்றும் கூர்மையாக விளையாடும் திறன் நிச்சயம் இந்த ஐபிஎல் போட்டிகளில் எடுபடும் என பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 12 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வார்னர் 694 ரன்கள் விளாசி ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். ஆகையால் இவ்வாண்டும் ஆரஞ்சு நிற தொப்பியை வார்னர் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய அணியின் ரன் மெஷின் என்றழைக்கப்படும் விராட் கோலிக்கும் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக களம் இறங்கும் விராட் கோலி பொது முடக்க நாள்களில் பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை முறுக்கேற்றி வைத்திருக்கிறார். கடந்த 5 மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததால் அரபு அமீரகத்தில் நடக்கும் போட்டிகளில் தன்னை நிரூபித்து கொள்ள ஆக்ரோசமாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் அணிக்காக விளையாடும் அருண் ஃபின்ச்சும் தொப்பியை கைப்பற்றுவதற்கான போட்டியில் இருக்கிறார்.

அணியின் ஓப்பனராக களம் காணும் ஆரோன் பின்ச் பவர் ஸ்ட்ரைக், குறைந்த ஓவர் கொண்ட போட்டிகளில் நீண்ட நேரம் நின்று விளையாடுவது போன்றவற்றில் பலம் பொருந்தியவராக பார்க்கப்படுகிறார். இவரை தொடர்ந்து பெங்களூர் அணியில் ஏபி டிவில்லியர்ஸ், பிரித்திவி பட்டேல், மார்க்கஸ் ஸ்டோயினிஸ் ஆகியோரும் ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன் ஓப்பனராக களமிறங்கும் ராபின் உத்தப்பா, கிருஸ் லின் வரிசையில் சுப்மான் கில்லுக்கும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. கொல்கத்தா அணியினரின் பயிற்சியாளரான பிரண்டன் மெக்கலமும் அணியின் பெரிய பலம் என சுப்மான் கில் கூறியுள்ளார். சுப்மான் கில் ஓபனராக களமிறங்கும் பட்சத்தில் எதிரணிக்கு கடுமையான போட்டியாளராகவும் அதிக ரன்கள் குவிக்கும் வீரராகவும் இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுலுக்கும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. காரணம் கடந்த முறை நடந்த ஐபிஎல் போட்டியில் சில ரன்கள் வித்தியாசத்திலேயே ஆரஞ்சு நிற தொப்பி அவர் கைநழுவி சென்றது. அதனால் அவரும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நிச்சயம் போராடுவார். அவரது விக்கெட் கீப்பிங் ஸ்டைல் சரி வர இருப்பதால் இந்திய அணியில் தோனியின் இடம் அவருக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.