தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில் இன்று பல இடங்களில் மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, மாங்காடு , நெடுவாசல், கோட்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது. இதேபோல ஆலங்குடி, கொத்தமங்கலம் உட்பட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. திருவாரூர் மாவட்டத்திலும் திருத்துறைப்பூண்டி, வரம்பியம், ஆதிரங்கம், வேலூர், நெடும்பலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை நீடித்தது. நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, திருப்பூண்டி, பொய்கை, நல்லூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தற்போது கதிர் வரும் தருவாயில் இருப்பதால் இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேச்சேரி, குளத்தூர், நங்கவள்ளி, ஜலகண்டபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்து குளிர்வித்தது. நீலகிரி மாவட்டம் உதகை நகர் பகுதியில் சேரிங் கிராஸ், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளிலும் குன்னூரில் ஒட்டுபட்டரை, அருவங்காடு, வண்டிச்சோலை போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் மழையால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். முதுமலை காப்பக வனப்பகுதியில் மாயாறு நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மாயாறு அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நண்பர்கள் முதல் மழை பெய்தது. இ பாஸ் பெற்றுக்கொண்டு சுற்றுலா பயணிகள் வரலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சாரல் மலையாகவும் சில நேரங்களில் கன மழையாகவும் பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், தற்கலை, மார்த்தாண்டம், குடித்துறை மலையோர பகுதிகளான கோதையார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும் நேற்று இரவை தொடர்ந்து காலையில் சாரல் மழை பெய்தது. மழை காரணமாக மாவட்டத்தில் ரப்பர் மரங்களிலிருந்து பால் வடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப் பாதையை கடக்க முடியாமல் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக அரசு பேருந்து பயணிகள் தவித்தனர். குரும்பூர் பள்ளத்தில் புரண்டோடிய நீரால் அந்த வழியாக சென்ற அரசு பேருந்து ஆற்றைக் கடக்க முடியாமல் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அடர்ந்த மலைப்பகுதியில் பயணிகள் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வெல்லம் குறைந்த பிறகு பேருந்து புறப்பட்டுச் சென்றது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வனத்துக்குளம், கொழுமம், கணியூர், காரத்தொழுவு போன்ற பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.