செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணங்களை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கற்பிக்கப்படும் படிப்புகளுக்கு நடப்பாண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை செமஸ்டருக்கான கட்டணத்தை ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

தவறினால் சில படிப்புகளுக்கு செப்டம்பர் 3ஆம் தேதிக்குள்ளும், சில படிப்புகளுக்கு செப்டம்பர் 5ஆம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கட்டணம் செலுத்த தவறுபவர்களின் பெயர்கள் மாணவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு செப்டம்பர் ஏழாம் தேதி அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்திருந்தார். இதனை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி. மாரியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பல மாணவர்களின் பெற்றோர் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நிலையில் செமஸ்டர் கட்டணத்தை செலுத்த நிர்பந்திக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

செமஸ்டர் கட்டணத்தில் 40 சதவீதம் மட்டுமே கல்வி கட்டணமாகவும் மீதமுள்ளவை ஆய்வகக் கட்டணம், நூலகக் கட்டணம், கணினி மைய கட்டணமாக இருப்பதாகவும் மனுவில் அவர் கூறினார். இந்த 60 சதவீத கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கட்டணம் செலுத்தா விட்டால் பல்கலைக்கழக மாணவர்களை நீக்கம் செய்யும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.