பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கடும் எதிர்ப்புகளுக்கிடையே Y+ பாதுகாப்போடு மும்பைக்கு சென்றார். பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை கங்கனா ரணாவத்தின் சமீபத்திய பேச்சு பேசு பொருளாக மாறியது. சுஷ்காந்த் சிங்கின் தற்கொலையைத் தொடர்ந்து இந்தி திரையுலகை விமர்சித்து வரும் அவர் மும்பையை பாதுகாப்பற்ற நகரமாக தான் உணர்வதாகவும், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல இருப்பதாகவும் அண்மையில் கூறியிருந்தார்.

இதற்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மும்பைக்கு திரும்ப வரக்கூடாது எனவும் கங்காவுக்கு மிரட்டல்களும் வெளியாகியிருந்தன. அந்த அச்சுறுத்தலை புறக்கணித்த கங்கனா உண்மை புறப்பட முடிவு செய்தார். தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் அச்சம் தெரிவித்திருந்தார். எனவே கங்கனாவுக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் அவர் தன் சொந்த மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்திலிருந்து மும்பைக்கு சென்றுள்ளார்.சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் புடை சூழ Y+ பாதுகாப்புடன் பயணித்தார் கங்கனா. மும்பை சென்ற கங்கனா ரணாவத்தை விமர்சித்து விமான நிலையத்தில் சிவசேனா கட்சி தொண்டர்கள் முழக்கமிட்டதுடன் , கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பையும் பதிவு செய்தனர். அதேநேரம் இந்திய குடியரசு கட்சி மற்றும் கர்னி சேனா தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்து கங்கனாவிற்கு ஆதரவாக கோஷமிட்டனர். மும்பையில் கங்கனாவிற்கு தாங்கள் உரிய பாதுகாப்பு அளிப்போம் என்றும் அவர்கள் கூறினர்.

இதனிடையே பாந்திரா பகுதியில் உள்ள கங்கனாவின் வீட்டில் விதிகளை மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறி அவற்றை இடிக்க மாநகராட்சி முற்பட்டது. முன்னதாக வீட்டில் விதிமீறி கட்டப்பட்ட பகுதியை இடிக்கப்போவதாக மாநகராட்சி நிர்வாகம் தனக்கு அனுப்பியிருந்த நோட்டீஸை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி வீட்டின் உரிமையாளர் வீட்டில் இல்லாத போது அதை இடிப்பது ஏன் என்று மாநகராட்சி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியது. வீட்டை இடிக்க தற்காலிக தடையை விதித்ததுடன் வழக்கு விசாரணையையும் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.