கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாய ஆதரவு நிதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி பயனாளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. முறைகேடாக பெறப்பட்ட நிதியிலிருந்து 4.5 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 8 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதமரின் விவசாய ஆதரவு நிதியை 2 லட்சம் பேர் முறைகேடாக பெற்றதாக கண்டறியப்பட்டுள்ளது. முறைகேடாக பெறப்பட்ட நிதியில் இருந்து 5 கோடியே 60 லட்சம் ரூபாய் திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது.

முறைகேட்டில் ஈடுபட்ட வர்களில் 4 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிசான் திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 191 பேர் பதிவு செய்யப்பட்டவர்களில் 3435 பேர் மட்டுமே தகுதி உடையவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் ஒரு கோடியே இது லட்சம் ரூபாய் முறைகேடு நடந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 25 லட்சம் ரூபாய் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளன. முறைகேட்டில் ஈடுபட்டதாக 3 வேளாண் உதவி அலுவலர்கள் உட்பட 17 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,821 போலிப் பயனாளிகள் கிசான் நிதி உதவி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 28 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிசான் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 1700 பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் பணம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களது வங்கி கணக்கில் மொத்தம் 68 லட்சம் ரூபாய் பணம் செலுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை 11 லட்சம் ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாத 375 பேர் பதிவு செய்து 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக 343 பேர் போலி கணக்குகளில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.