காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு பாஜகவில் இணைய உள்ளார் என்ற தகவல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த குஷ்புவுக்கு சட்டமன்றத் தேர்தலில் சீட்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்சித் தலைமை சீட் வழங்கவில்லை .

2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் சீட் வழங்கப்படவில்லை இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகிய போது சச்சின் பைலட் அல்லது ஜோதிராதித்யா சிந்தியா தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என குஷ்பு கூறிய கருத்து தமிழக காங்கிரஸ் கமிட்டியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதற்கு மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கண்டனம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து குஷ்பு புதிய கல்வி கொள்கையை வரவேற்று ட்வீட் செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோணா தொற்று ஏற்பட்டபோது விரைவில் குணமடைய வேண்டுமென ட்வீட் செய்தார். தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கோரி ட்வீட் செய்திருந்தார் குஷ்பு.

இதனால் அவர் பாஜக பக்கம் சாய்கிறார் என்ற பேச்சு பரவலாக எழுந்தது. இதனிடையே தமிழகத்தைச் சேர்ந்த நடிகை ஒருவர் பாஜகவில் இணைய உள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து குஷ்புவை தொடர்பு கொண்டு கேட்டபோது இதுபோன்ற வதந்திகள் தொடர்ந்து பரப்ப படுவதாகவும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கூட தற்போது கருத்து தெரிவித்துள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.