தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே இனிமேல் திரைப்படங்களை வெளியிட முடியும் என்று திரையரங்க உரிமையாளர்களுக்கு பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் கடிதம் எழுதி உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக திரையரங்கில் பொருத்தப்பட்டுள்ள கியூப் மற்றும் யூ எப் ஓ புரொஜக்டர்களுக்கு வி பி எஃப் கட்டணம் சேர்த்து வருவதாகவும் இது புரொஜக்டர்களின் விலையைவிட அதிகம் என்றும் எனவே இனி வி பி எஃப் கட்டணத்தை செலுத்த முடியாது என்றும் கூறியுள்ளனர்.

அதேபோல பல படங்களுக்கு முறையான காட்சிகள் ஒதுக்கப்படாத பொழுது 50 40 மற்றும் 30 சதவீத ஷேர் முறை என்பது மிகக் குறைவு . எனவே அந்த முறையை மாற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரத் தொகைகளை டிஜிட்டல் நிறுவனங்களும் திரையரங்க உரிமையாளர்கள் மட்டுமே பங்கிட்டுக் கொள்கின்றனர். இனி அன்றைய தினத்தில் வெளியிடப்படும் படத்தின் தயாரிப்பாளருக்கும் அதில் பங்கு வழங்க வேண்டும் .

இதுதவிர ஆன்லைன் டிக்கெட்டிற்கு வசூலிக்கப்படும் சர்வீஸ் சார்ஜிலும் தயாரிப்பாளர்களுக்கு சதவிகித அடிப்படையில் சேர் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பாரதிராஜா தலைமையில் அம்பத்தி ஒரு தயாரிப்பாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இக்கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே திரையரங்கம் திறக்கப்படும்போது திரையரங்குகளில் படங்களை வெளியிட முடியும் என்றும் இல்லையெனில் படங்களை வெளியிட முடியாத சூழல்தான் நிலவும் என்றும் தெரிவித்துள்ளனர்.