விவசாய சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றம் செல்ல வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக வயல்வெளியில் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை சந்தித்து ஸ்டாலின் பேசினார்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகள் அவர்களின் சொந்த நிலத்திலிருந்தே விரட்டி அடிக்கப்படும் சூழல் உண்டாகும் என தெரிவித்தார். பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளே வேளாண் சட்டங்களை எதிர்க்கின்றனர் என்ற ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.