பல கட்டங்களாக ஊரடங்கு தளர்த்தப் பட்டு தற்போது தமிழகம் முழுவதும் செல்ல இ பாஸ் முறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் மழை வாழ் சுற்றுலா தளங்களான நீலகிரி , கொடைக்கானல் மற்றும் ஏற்காடு பகுதிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் இபாஸ் பெற்று செல்லலாம் என அரசு தெரிவித்துள்ளது.

விடுமுறை என்றாலே தமிழக மக்களின் சுற்றுலாக்கான தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது ஊட்டியும், கொடைக்கானலும் தான். அடிக்கடி ஊர் சுற்றாதவர்கள் கூட இந்த பொது முடக்கம் முடிவுக்கு வந்ததும் ஊட்டிக்கோ கொடைக்கானலுக்கோ சென்று வரவேண்டுமென்று கூறியிருக்கக் கூடும். அப்படி இருக்க மாநிலம் முழுவதும் ரத்து செய்யப்பட்ட இ பாஸ் நடைமுறை இந்த மலை வாசஸ்தலங்களுக்கு மட்டும் நீடிப்பது பயணிகளுக்கு எப்படியோ பயணிகளை நம்பியுள்ள சுற்றுலா சார் பணியாளர்களுக்கும் , வியாபாரிகளுக்கும் கைக்கு மட்டும் எட்டிய கனியாகத்தான் இருக்கும். ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் முதல் 13 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் வந்து சென்ற நீலகிரி மாவட்டம் கடந்த 5 மாதங்களுக்கு மேல் தனித்து விடப்பட்ட நிலையில் தற்போதைய தளர்வு சற்றே தங்களுக்கு ஆறுதல் அளித்தாலும் உள்ளூர் வாகனங்கள் மட்டும் இயங்குவதில் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று கேள்வியை எழுப்புகிறார்கள் வாடகை வாகன ஓட்டுநர்கள். உள்ளூர்வாசிகள் வாடகைக்கு காரை எடுக்க மாட்டார்கள் வெளியூரிலிருந்தோ வெளிமாநிலங்களில் இருந்தோ வருபவர்கள் தான் சுற்றிப் பார்க்க ஆசைப்படுவார்கள் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

வாடகை கார் ஓட்டுனர்கள் மட்டுமல்ல 300க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேயிலை மற்றும் பெர்மட் சாக்லேட் கடைகள் நீலகிரி தைல உற்பத்தியாளர்கள் நூற்றுக்கணக்கான வழிகாட்டிகள் என பலரது நிலையும் இப்படியாகத்தான் இருக்கிறது. ஊட்டியில் இப்படி என்றால் இதுவரை வெளியில் அறியப்படாத புதிய அருவிகள் தொல்லியல் சின்னங்கள் அடங்கிய இடங்கள் பண்ணை சுற்றுலா தலங்கள் என புதுப்பித்துக் கொண்டிருக்கும் கொடைக்கானலில் இந்த நிலையிலும் பயணிகளை வரவேற்க சுற்றுலா சார் தொழிலாளர்களும் வியாபாரிகளும் எல்லா வகையிலும் தாங்கள் தயார் என்கின்றனர்.