அரசியல்வாதிகளோடு நடிகர்களை ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டப்படும் களமாக மாறி வருகிறது மதுரை. நடிகர் விஜயை அரசியலுக்கு அழைக்கும் வகையில் அவரது ரசிகர்கள் மதுரையின் பல்வேறு பகுதிகளில் ஒட்டி இருந்த போஸ்டர் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

எம்ஜிஆருடன் ஒப்பிட்டு நடிகர் விஜயை அந்த போஸ்டரில் சித்தரித்திருந்ததால் ஆளும் அதிமுகவினர் போஸ்டர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். விஜய் ரசிகர்கள் ஏற்படுத்திய இந்த சலசலப்பு ஓயாத நிலையில் , அடுத்ததாக ரஜினி ரசிகர்கள் தற்போது களத்தில் குதித்துள்ளனர். எம்ஜிஆரின் நல்லாட்சியை தருவேன் ஆட்சி மாற்றம் தற்போது இல்லை என்றால் இனி எப்போதும் இல்லை என ரஜினி உதிர்த்த வாசகங்களை அச்சடித்து போஸ்டராக ஒட்டியுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை அண்ணாவின் வழித்தோன்றல்கள் மூலம் ஆட்சி இனி அண்ணாத்த வின் ஆன்மீக அரசியல் ஆட்சி என்ற வாசகங்களும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. சங்கம் வளர்த்த மதுரையில் தற்போது மாற்று அரசியலுக்கான முன்னெடுப்பாக போஸ்டர் யுத்தம் தொடங்கபட்டிருப்பது தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்த தொடங்கியிருக்கிறது.