அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற போட்டி எழுந்துள்ளதால் மனங்கள் இனையுமா அல்லது அடுத்த தர்மயுத்தத்திற்கு ஓ பன்னீர்செல்வம் தயாராகிறாரா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. ஆட்சியையும் கட்சியையும் ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது இரண்டு முறை பதவி வகித்த ஓ பன்னீர்செல்வம் அவர் காலமான பிறகு மூன்றாவது முறையாக பதவியேற்றார். ஆனால் அடுத்த சில வாரங்களில் அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் பலரின் கோரிக்கையால் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராகவும் அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தி சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். இதனைத் தொடர்ந்து ஓ பன்னீர் செல்வத்துடன் பதினோரு எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றனர். சசிகலா ஆதரவாளர்கள் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டு அரசியல் களம் பரபரப்பானது.

சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க தயாராகி வந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்தது. இதனால் 2017 பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றார். இந்த சூழலில் இரட்டை இலை வழக்கில் தினகரன் சிறை சென்றபோது ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இணைப்பு நடைபெற்றது. அப்போது கட்சிக்கு ஓ பன்னீர்செல்வமும் ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமியும் என முடிவெடுக்கப்பட்டது. அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை என்ற மைத்ரேவின் கூற்று அவ்வப்போது கட்சிக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.