தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தெளிவான முடிவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10 ,11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. மேலும் மாணவர்கள் வழிகாட்ட வேண்டிய வழிமுறைகளும் வெளியிடப்பட்டன.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பப்பட்டால் சந்தேகம் கேட்க பள்ளிக்குச் செல்லலாம் என தெரிவித்திருந்தார். ஆனாலும் இந்த விவகாரம் தொடர்பாக குழப்பம் நீடித்து வரும் நிலையில் பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் என கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது எல்லாத் துறைகளும் ஒன்றிணைந்து முதலமைச்சர் அவர்கள் நாளை மறுதினத்திலே அனைவரையும் அமரச் சொல்லி இருக்கிறார் எனவும் அமர்ந்து பேசி கலந்தாய்வு செய்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.