சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கட்சியிலும் ஆட்சியிலும் தலையிட விடக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனாரின் 149 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அவரது சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார் ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்து தான் கருத்துக் கூற முடியாது என்றார். அதிமுகவை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று கூறியவர் சசிகலாவையும் சசிகலா குடும்பத்தினரையும் கட்சியிலும் ஆட்சியிலும் தலையிட விடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக உள்ளதாக கூறினார்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டதில் அரசியல் தலையீடு இல்லை என்றுகூறி இது நிர்வாக ரீதியிலான நடவடிக்கை என்றார். பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா அமைச்சர்கள் குறித்து தெரிவித்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார் அமைச்சர்களை பேச வேண்டாம் என்று சொல்ல எச் .ராஜா யார் என்றும் கேள்வி எழுப்பினார். கூட்டணியில் அவர்கள் தார்மீகப் பொறுப்பு கடமையை கடைபிடிக்க வேண்டும் என ஜெயக்குமார் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.