ஒன்பது முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த மூத்த அரசியல்வாதி ஜஸ்வந்த் சிங் காலமானார். பாஜக ஆட்சியில் முக்கிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்த இவர் சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் அடிக்கடி ஆவார். முன்னாள் ராணுவ அதிகாரி, ஒன்பது முறை நாடாளுமன்ற உறுப்பினர், முக்கிய துறைகளின் அமைச்சர் , எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் ஜஸ்வந்த் சிங். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் 1938 ஆம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி பிறந்தார். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று தனது சிறுவயது கனவை பத்தொன்பதாவது வயதில் நனவாக்கிக் கொண்டார்.

1965 ஆம் ஆண்டு வரை சேவையாற்றிய ஜஸ்வந்த் சிங் பின்னர் அரசியல் வாழ்வில் நுழைந்தார். ஜன சங்கம் அவரது அரசியல் வாழ்க்கையை ஒளியை ஏற்றி வைத்தது. 1980 ஆம் ஆண்டு முதன்முதலாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து 9 முறை நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றும் வாய்ப்பை பெற்றார் ஜஸ்வந்த் சிங். மறைந்த திரு வாஜ்பாய்க்கு மிகவும் நெருக்கமானவர், வாஜ்பாய் ஆட்சியில் நிதித்துறை , பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் என முக்கிய துறைகளின் அமைச்சராக பதவி கிடைத்தது. தனக்கு கிடைத்த பொறுப்புகளை சிறப்பாகக் கையாண்டவர் என்ற பெருமை ஜஸ்வந்த் சிங்கிற்கு உண்டு.

முக்கியமான நாடாளுமன்ற குழுக்களின் தலைவர், திட்ட கமிஷனின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். 1999 இல் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர் இந்தியா விமானம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. இதனை முறையாக கையாலாகாததால் மூன்று பயங்கரவாதிகளை விடுதலை செய்யும் நிலை உருவானதாக ஜஸ்வந்த் சிங் மீது விமர்சனம் உண்டு. 1998 இல் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய நிலையில் அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதித்தது. இதனை பேச்சுவார்த்தை மூலம் சரி செய்து இரு நாட்டு உறவை புதுப்பிக்க காரணமாக இருந்தவர் ஜஸ்வந்த் சிங்.