இரவுக்கும் பகலுக்கும் வேறுபாடு இல்லாத அளவிற்கு எப்போதுமே பரபரப்பாக இயங்கி தூங்கா நகரம் என்று புகழப்படும் மதுரை இன்று கொரோனாவின் கோர தாண்டவத்தால் கலை இழந்து தூங்கும் நகரமாக காட்சியளிக்கிறது. மதுரையை பொருத்தவரை சாப்பாடு என்ற ஒரு பிரச்சனையே கிடையாது , எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சுடச்சுடவே உணவு கிடைக்கும் இது மதுரையின் தனிச்சிறப்பு.

சுல்தான் கடைக்குச் சென்றால் பிரியாணி கிடைக்கும், இடியாப்ப கடைக்குப் போனால் 11 மணி ஆனாலும் சுடச்சுட முட்டை இடியாப்பம் கிடைக்கும், அதே மாதிரி ஹரி அண்ணா கடைக்கு போனால் மூணு மணிக்கு பொங்கல் கிடைக்கும், அதேமாதிரி நாயக்கர் மால் போனால் ஒன்றரை மணிக்கு அப்பம் கிடைக்கும் இவை அனைத்தும் மதுரையில் நள்ளிரவில் கிடைக்கக்கூடியவை. நள்ளிரவிலும் வகைவகையான உணவுகளுடன் இயங்கும் கடைகள் காய்கறி பழ மார்க்கெட்டுகளில் உற்சாகத்துடன் வேலை செய்யும் தொழிலாளிகள் 24 மணி நேரமும் பரபரப்பான வாகன போக்குவரத்து என்று இருந்த மதுரையின் நிலை இன்று கொரோனாவால் தலைகீழாக மாறியுள்ளது.

பெரிய காய்கறி மார்க்கெட்டுகளும், பழ அங்காடிகளும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாவட்ட எல்லைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதால் முக்கிய வீதிகளும் பிரதான சாலைகளும் வழக்கத்திற்கு மாறாக நிசப்தமாகி உள்ளன. இதனால் வழக்கமான பரபரப்பு அடங்கி, சுறுசுறுப்புமின்றி தங்கள் ஊரே மந்தமாக காணப்படுவதாக கூறுகின்றனர் மதுரைவாசிகள். 24 மணி நேரமும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வெளியூர் மக்களை நம்பி இரவில் ஆட்டோ ஓட்டி தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் இரவு நேரங்களில் உணவு கடைகளை நடத்தி வந்தவர்கள் என பலரும் கொரோனாவினால் தங்கள் வருமானம் பல வருடங்கள் பின்னோக்கி நகர்ந்து விட்டது என வேதனை தெரிவித்துள்ளனர்.