கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மக்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது காது அடைக்கும் அளவிற்கு நாட்டு பட்டாசு ஆலை இருந்த இடத்தில் கேட்ட சத்தம் அதிர்வை உணர்ந்த மக்கள் அந்தப் பகுதியை நோக்கி விரைந்தனர் அப்போது அவர்கள் கண்ட கோரக் காட்சி தான் பட்டாசு ஆலை வெடி விபத்து. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இருக்கும் குறுங்குடி கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர் காந்திமதி குடும்பத்தினர்.

பொது முடக்க தளர்வு அடிப்படையில் காந்திமதி தனது மகள் பேத்தி உட்பட 9 பெண்களுடன் அங்கு மீண்டும் நாட்டு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் காந்திமதி அவரது மகள் லதா மற்றும் மலர்க்கொடி சித்ரா உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்து கிடந்தனர். மக்கள் அங்கு சென்று பார்த்தபோது தீயில் உடல் கருகி 4 பேர் படுகாயங்களுடன் துடிதுடித்து கொண்டிருந்ததை கண்டு பதறிப் போயினர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் இணைந்து படுகாயமடைந்த நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அதில் மருத்துவமனையில் மேலும் இருவர் உயிரிழக்க பலியானவர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

இந்த விபத்தில் பட்டாசு வெடி விபத்து நடைபெற்ற குடோன் தரைமட்டமானது. சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தி முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். விபத்திற்கு வேதி பொருட்களின் உராய்வு காரணமா என விசாரணை நடத்தி வருவதாக அவர்கள் கூறினர். பட்டாசு தயாரிப்பதற்கு சல்பர், பொட்டாசியம் ,நைட்ரேட், அலுமினியம் பவுடர் போன்றவையும் ஒரு சிலர் வேறு சில கெமிக்கல்ஸை உபயோகிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.