கொரோனா பிரச்னையால் பொருளாதார ரீதியாக தன் படத்தின் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தனது சம்பளத்தில் இருந்து 25 சதவிகிதத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்திருந்தார் நடிகர் விஜய் ஆண்டனி.

இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் ‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’, ‘காக்கி’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

தற்போது ஊரடங்கு ஒரு பக்கம் இருந்தாலும் தமிழக அரசு கொடுத்துள்ள தளர்வுகளைப் பயன்படுத்தி படப்பிடிப்பிற்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக நடிகர் விஜய் ஆண்டனி திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். “என்னை நம்பி, என்னை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் என் தயாரிப்பாளர்களுக்காகவும், என் இயக்குனர்களுக்காகவும் மற்றும் பெப்சி தொழிலாளிகளுக்காகவும் நாளை முதல் சரியான பாதுகாப்புடன், நான் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன். நம்பிக்கையுடன் நான்” என்று கூறியுள்ளார். விஜய் ஆண்டனியின் இந்தப் பதிவை ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வரவேற்று வருகிறார்கள்.