சித்தார்த் நடித்த ‘அவள்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் மிலின் ராவ். தமிழ் சினிமாவில் காமெடி பேய் படங்கள் தான் பெரிதாக உள்ளது என்று பேசப்பட்ட நிலையில் அதை உடைத்து ஒரு சீரியஸ் ஆன ஹாரர் படமாக அவள் படத்தை கொடுத்து வெற்றியை பதிவு செய்தார் மிலன் ராவ்.

இதை தொடர்ந்து 'பிளைண்டு' என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக நயன்தாரா நடிக்கும் 'நெற்றிக்கண்' படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸின் காரணமாக தடைப்பட்ட நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார்.

‘நெற்றிக்கண்’ பட வேலைகளை முடித்த பிறகு சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அச்சன்டா கோபிநாத் இவர்களின் தயாரிப்பில் நடிகர் ராணாவின் படத்தை மிலின் ராவ் இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகள் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். திரில்லர் கதையம்சம் கொண்ட படமான இதை அனைத்து மொழி ரசிகர்களும் கொண்டாடும் விதத்தில் படமாக்க உள்ளனராம். தற்போது ராணா கைவசம் ‘காடன்’, ‘மடை திறந்து’, ‘1945’, ‘விராட பர்வம்’ போன்ற படங்கள் உள்ளது. இந்த படங்களுக்கான வேலைகள் முடித்து அடுத்த சம்மரில் இந்த கூட்டணி இணையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.