திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர் பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய திமுக பொதுக்குழு பொதுச்செயலாளருக் கான அதிகாரத்தை மீண்டும் வழங்க எந்த வித தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் அக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தலால் மாநிலம் முழுவதும் 67 இடங்களிலிருந்து சுமார் 3500 பொதுக்குழு உறுப்பினர்கள் காணொளி மூலமாக பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய மு.க ஸ்டாலின் பொதுச் செயலாளர் பதவிக்காக துரைமுருகன் தாக்கல் செய்த வேட்பு மனுவை 218 பேரும் , பொருளாளர் பதவிக்காக டி.ஆர் பாலு தாக்கல் செய்த வேட்புமனுவை 125 பேரும் வழிமொழிந்திருப்பதாகவும் தெரிவித்தார். திமுக பொதுச் செயலாளர்களாக க. பொன்முடி ஆ.ராசா ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதால் துணைப்பொதுச்செயலாளர் களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஐ. பெரியசாமி , சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக உள்ளனர். நிர்வாகிகள் தேர்வு நியமனத்தை தொடர்ந்து பொதுக்குழுவில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் மருத்துவ கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டையும், பட்டியலின மாணவர்களுக்கு 18 சதவீத இட ஒதுக்கீட்டையும் இந்த கல்வியாண்டே வழங்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கைக்கும், தேசிய கல்வி கொள்கைக்கும் கண்டனங்கள் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ள திமுக , பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. புதிய பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையிலும் பொதுச்செயலாளருக் கான அதிகாரம் குறித்து எந்தவித தீர்மானமும் இல்லை. கட்சி உறுப்பினர்களை சேர்ப்பது , நீக்குவது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட அதிகாரங்கள் திமுக பொதுச்செயலாளர் வசம் இருந்தன.

அப்போதைய பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது , அந்த அதிகாரங்கள் தலைவருக்கு மாற்றப்பட்டன. க. அன்பழகன் மறைந்து புதிய பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதிகாரங்கள் மீண்டும் பொதுச் செயலாளருக்கு வழங்கப்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் அதிகாரத்தை மீண்டும் பொதுச் செயலாளருக்கு வழங்குவது குறித்து பொதுக்குழுவில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.