தொழில் நிறுவனங்கள் 100% தொழிலாளர்களோடு இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவை இல்லாமல் இது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து சிறப்பு ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் சேவை வரும் ஏழாம் தேதி தொடங்க இருக்கிறது. ஆனால் சென்னையின் உயிர்நாடியான புறநகர் ரயில் சேவை குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

சென்னை புறநகர் ரயில் சேவையில் சென்னை கடற்கரை ,தாம்பரம், செங்கல்பட்டு ஆகியவற்றை இணைக்கும் வழித்தடம் முக்கியமானது. இதில் சுமார் 5 லட்சம் பயணிகள் நாளொன்றிற்கு பயணம் செய்வர். சென்னை சென்ட்ரல் , திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி வழித்தடங்களில் நான்கு லட்சம் பயணிகள் நாள் ஒன்றிக்கு பயணம் செய்வர். சென்னை சூலூர் பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் 2 லட்சமும், சென்னை வேளச்சேரி பறக்கும் வழித்தடத்தில் தினசரி 1 முதல் 5 லட்சம் பேர் என நாளொன்றுக்கு 12 லட்சம் பயணிகள் புறநகர் ரயில் சேவையை நம்பியிருக்கிறார்கள். இந்த நிலையில் புறநகர் ரயில் சேவை தொடங்கினால் மட்டுமே தொழில்நிறுவனங்கள் 100% தொழிலாளர்களுடன் இயங்க முடியும் என்ற கருத்து நிலவுகிறது.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் பெரும்பாலான தொழிலாளர்கள் திருவள்ளூர், கடம்பத்தூர், திருவானங்காடு, அரக்கோணம் போன்ற பகுதிகளிலிருந்து தினமும் சென்று வேலை செய்பவர்கள். இதில் பலர் திறமையான தொழிலாளர்கள் தற்பொழுது 100% தொழிலாளர்களுடன் எங்கெல்லாம் என்ற நிலை இருந்தபோதிலும் புறநகர் ரயில்கள் இயங்காததால் இவர்கள் வேலைக்கு செல்ல இயலவில்லை. புறநகர் ரயில் சேவை குறித்த அறிவிப்பு வெளி வராத நிலையில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்க அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது மெட்ரோ ரயில் சேவையை விட 12 மடங்கு அதிகமாக பயணிகளை கொண்ட புறநகர் ரயில் சேவையில் மக்களை கட்டுப்படுத்தி சமூக இடைவெளி கடைபிடிப்பதை கண்காணிப்பதில் சிக்கல் நீடிப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனாலும் சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு புறநகர் ரயில் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி சேவையை தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.