திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டிஆர் பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின் பொதுச்செயலாளர் பதவிக்காக துரைமுருகன் தாக்கல் செய்த வேட்பு மனுவை 218 பேரும் , பொருளாளர் பதவிக்காக தாக்கல் செய்த வேட்பு மனுவை 125 பேரும் வழிமொழிந்துள்ளதாக தெரிவித்தார்.

பொதுச் செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டிஆர் பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அறிவித்த ஸ்டாலின் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மு க ஸ்டாலின் கட்சி விதிப்படி திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக க. பொன்முடி ஆ.ராசா ஆகியோர் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். ஏற்கனவே ஐ .பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் துணைப் பொதுச் செயலாளர்களாக உள்ள நிலையில் , துணைப் பொதுச் செயலாளர் களின் எண்ணிக்கை தற்போது ஐந்தாக உயர்ந்துள்ளது.

திமுக பொதுக்குழு கூட்டத்தில் 67 இடங்களில் இருந்து காணொளி வாயிலாக சுமார் 3 ஆயிரத்து 500 பேர் பங்கேற்றுள்ளனர்.பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு துரைமுருகன் அவர்களைத் தவிர வேறு யாரும் போட்டியிடாததால் திரு துரைமுருகன் அவர்களே கழகத்தின் பொதுச்செயலாளராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கிறேன். பொருளாளர் பொறுப்பிற்கு போட்டி ஏதும் இல்லாததால் திரு டி ஆர் பாலு அவர்களை கழகத்தின் பொருளாளராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கிறேன் எனவும் கழக சட்டதிட்ட விதி 17 பிரிவு 3ன் படி துணை பொதுச் செயலாளர்களாக முனைவர் க. பொன்முடி அவர்கள் திரு ஆ.ராசா அவர்கள் நியமிக்கப் படுகிறார்கள் என்பதை தலைமைக் கழகத்தின் சார்பில் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அந்த உரையில் பேசினார்.