தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்த மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

எண்ட்ரி கொடுத்ததில் இருந்தே விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முக்கிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த இவருக்கு, ‘மகாநடி’ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்காக இவர் தேசிய விருதும் பெற்றார். நடிகையாக அனைவரையும் கவர்ந்த இவர் ‘சாமி 2’ படத்தின் மூலம் பாடகியாகவும் உருவெடுத்தார்.

இந்நிலையில், வெப் தொடர் ஒன்றின் கதையை கேட்டதும் பிடித்துப்போன கீர்த்தி சுரேஷ் அந்த தொடரை தானே தயாரிக்கவும் முடிவு செய்துள்ளாராம். அதில் அவரே நடிப்பாரா என்பது பின்னர் தான் தெரியவரும். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.