பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜானி என்ற பெயரில் இயங்கி வரும் ஹேக்கர்கள் குழு இந்த செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கம் @narendramodi_in என்ற பெயரில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ட்விட்டர் கணக்கை சுமார் 25 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். திடீரென பிரதமர் மோடியின் இந்த ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்புகளை சரி செய்வதற்காக க்ரிப்டோ கரன்சி மூலம் பிரதமர் நிதித் திட்டத்திற்கு நிதியை அனுப்புங்கள் என கூறி ஹேக்கர்கள் ட்வீட்டுகளை வெளியிட்டனர்.

இது சர்வதேச அளவில் விவாதப்பொருளான நிலையில் மோடியின் ட்விட்டர் பக்கம் சற்று நேரம் ஹேக் செய்யப்பட்டது உண்மைதான் என தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம் அதனை சரி செய்து விட்டதாகவும், விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது. கடந்த ஜூலை மாதம் பராக் ஒபாமா, எலன் மஸ்க், வாரன் பஃபெட், கென்யா வெஸ்ட், பில்கேட்ஸ், ஜெப் பெசோஸ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் இதேபோல ஹேக் செய்யப்பட்டு பிட்காயின் மோசடி நடைபெற்றது.ப்ளோரிடாவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் இந்த செயலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். எனவே யார் இந்த செயலில் ஈடுபட்டது என குழப்பும் ஏற்பட்ட நிலையில் ஜான் விக் என்ற ஹேக்கிங் குழு தாங்கள் தான் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளது. தாங்கள் பேட்டியம் வாலின் கணக்கை ஹேக் செய்ததாக வெளியான தகவலையும் மறுத்துள்ளது. ஜான் விக் ஹேக்கிங் குழு எங்கிருந்து செயல்படுகிறது என்று குறித்த விவரங்கள் முழுமையாக தெரியவரவில்லை.

ஆனால் இது உலக அளவில் பிரபலமான பெயர், ஹாலிவுட் நடிகர் கீனுரிவிஸ் நடித்த ஆக்சன் திரைப்படம் தான் ஜான் விக். தன்னுடைய வீட்டில் நுழைந்து ஆசையாக வளர்த்த நாயை கொலை செய்து காரை திருடிச் சென்ற நபரை தேடும் கதாபாத்திரமே ஜான் விக். முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறது. இந்த கதாபாத்திரத்தில் நடித்த கீனுரிவிஷ் பிறந்தநாள் அன்று அவரது கதாபாத்திரத்தின் பெயரில் மோடியின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. பப்ஜி உள்ளிட்ட சீன செயலிகள் தடைசெய்யப்பட்டது, எல்லை விவகாரம் என இந்தியா-சீனா இடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் இவ்வாறு செய்தார்களா என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.