புதுச்சேரியில் உரிய அனுமதியின்றி வீட்டில் தேக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் கணவன் மனைவி உயிரிழந்தனர். புதுச்சேரி அரியாங்குப்பம் அந்தோணியார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நெப்போலியன் அரசின் உரிய அனுமதி இல்லாமல் வீட்டிலேயே பட்டாசு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை அருகில் உள்ள ஒரு கட்டிட வீட்டில் வைத்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு திடீரென பயங்கர சத்தம் கேட்டது . அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது நெப்போலியன் பட்டாசு மூலப்பொருட்களை தேக்கி வைத்திருந்த வீடு வெடித்து தரைமட்டமானது. மேலும் நெப்போலியன் அவர் குடிசை வீடும் நெருப்பிலிருந்து தரைமட்டமானது. இதில் நெப்போலியன் மற்றும் அவரது மனைவி பத்மா இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.பின்பு இடிபாடுகளில் சிக்கியிருந்த நெப்போலியன் மற்றும் அவரது மனைவி பத்மா ஆகியோரை மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மேலும் சம்பவம் நடந்த நேரம் அவரது மகள்கள் இருவரும் வெளியே சென்றிருந்ததால் இந்த விபத்தில் சிக்காமல் உயிர் பிழைத்தனர்.