தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஆண்டிபட்டி அல்லிநகரம் வீரபாண்டி பழனிசெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் மானாவாரி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் காலையில் வெயில் வாட்டி வைத்த நிலையில் பிற்பகலுக்கு பிறகு இடியுடன் கூடிய மழை பெய்தது. கானை, விக்ரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அரை மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியிலும் மழை பொழிந்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்ததில் வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறையிலும் மழை பெய்தது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி ,கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சிவகங்கை, ராமநாதபுரம் ,விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் குமரிக்கடல், மன்னர் வளைகுடா, கேரள கடலோரம், மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில் குளைச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை கடல் அலைகள் 2.5 மீட்டரிலிருந்து 3 மீட்டர் வரை எழும்பும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.