விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை திறந்த வெளி சந்தையில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக விற்கக் கூடாது என நினைப்பவர்கள் தான் வேளாண் சட்டத்தை எதிர்க்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு மெகா திட்டங்களை காணொளி மூலமாக தொடங்கி வைத்து பேசிய மோடி எதிர்ப்பதை மட்டுமே ஒரே பணியாக கொண்டு எதிர்க்கட்சிகள் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் அனைவரும் இடைத் தரகர்களுக்கு ஆதரவாளர்கள் என கூறிய அவர் விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருளை திறந்த வெளி சந்தையில் சுதந்திரமாக விற்க கூடாது என அவர்கள் நினைக்கின்றனர் என்றும் விமர்சித்தார்.

ஜன்தன் வங்கி கணக்கு, ஜிஎஸ்டி, ரபேல் , ஒரே தரம் ஒரே ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் ஒரே ஒரு கட்சி மட்டுமே தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்றும் காங்கிரஸ் கட்சியை அவர் மறைமுகமாக சாடினார். மேலும் வேளாண்மை துறையில் கடவுளாக கருதப்படும் டிராக்டர் மற்றும் கருவிகளை தீ வைத்து விவசாயிகளை அவமதிக்கின்றனர் என்றும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.