தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள் திரைப்படங்களுக்கு இன்றைய காலக்கட்டத்தில் சவாலாக இருக்கிறது. நல்ல படங்கள் கூட இது போன்ற தளங்களினால் வசூலில் தோல்வியை சந்திக்கிறது. தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் கூட திருட்டுத்தனமாக இணையதளங்களில் பதிவேற்றப்படும் படங்களை பதிவிறக்கம் செய்து பார்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் படங்கள் ரிலீஸான சில மணி நேரத்திலேயே இணையதளங்களில் வெளியாகி திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பிரச்னைகளில் இருந்து தயாரிப்பாளர்கள், படக்குழு தப்பிக்க பல முயற்சிகளை எடுத்தாலும் அது பலனளிக்காமல் படங்கள் இணையதளங்களில் வெளியாவது தொடர் கதையாக தான் இருக்கிறது.

இந்த நிலையில் திரைப்படங்களை திருட்டுத்தனமாக படமெடுத்து வெளியிட்டு பைரஸியை வளர்த்து வந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு மத்திய அரசு முடிவுக்கட்டியுள்ளது. உடனடியாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க ஆணை பிறப்பித்துள்ளது அதன்படி தமிழ் ராக்கர்ஸ், இசைமினி ஆகிய தளங்கள் முடக்கப்பட்டுள்ளது.