கேரளாவில் பெண்களை கொச்சைப்படுத்தி யூடியூப் சேனல் நடத்தியவரை நேரில் சென்று சரமாரியாக தாக்கிய பெண்கள் மீது பிணையில் வெளிவர முடியாத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் பெண்களை அவமதிப்போருக்கு கடும் தண்டனை விதிக்கும் புதிய சட்டம் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விடுதி ஒன்றில் வசிக்கும் விஜய்.பி நாயர் 'vtrix scene' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்திவருகிறார். இந்த யூடியூப் சேனலில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தும் கொச்சைப்படுத்தியும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். சமீபத்தில் திரைப்பட பின்னணி குரல் கொடுப்பவர்கள் மகளிர் அமைப்பு குறித்தும் ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பின்னணி குரல் கலைஞரான பாக்கியலட்சுமி மகளிர் அமைப்பைச் சேர்ந்த தியாசனா மற்றும் சிலர் கடந்த சனிக்கிழமை விஜய்.பி நாயர் தங்கியிருந்த விடுதிக்கு சென்று அவர் மீது கருப்பு மையை ஊற்றியதோடு அடித்து உதைத்தனர்.

இதனை அடுத்து இருப்பிடம் புகுந்து அடித்து உதைத்து செல்போன், லேப்டாப், ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச் சென்றதாக விஜய்.பி நாயர் கொடுத்த புகாரில் பாக்கியலட்சுமி உள்ளிட்ட மூன்று பெண்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் பெண்களை ஆபாசமாக பதிவிட்ட விஜய்.பி நாயர் மீது பிணையில் வெளிவரக்கூடிய வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பெண்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் பினராய் விஜயன் குரல் கொடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் பெண்களை அவமதிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர ஆலோசிக்க படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.