தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர இந்த ஆண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் ஒரு லட்சத்தி 15 ஆயிரத்து 88 பேர் மட்டுமே கட்டணம் செலுத்தி சான்றிதழ் பதிவேற்றம் செய்திருந்தனர்.

இந்நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிட்டார். இதில் சஷ்மிதா என்ற மாணவி 199.67 கட் ஆப் மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். நவநீத கிருஷ்ணன் என்ற மாணவர் இரண்டாவது இடமும், காவியா என்ற மாணவி மூன்றாவது இடமும் பிடித்தனர். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 12406 பேர் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார். அக்டோபர் எட்டாம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக பொதுப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.