கொரோனா அச்சுறுத்தலால் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வந்த நிலையில் நான்காம் கட்ட தளர்வில் ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கத்திற்கும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் இயல்பான ஞாயிற்றுக்கிழமையாக காட்சியளித்தது. சென்னையில் பெசன்ட் நகர் உள்ளிட்ட தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமையோட்டி 100-க்கும் அதிகமானோர் கூடி வழிபாடு செய்தனர். இதேபோல ஈரோடு மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரார்த்தனை நடைபெற்றது.

சிஎஸ்ஐ பெந்தபெஸ்தே சபைகளிலும் பிரார்த்தனை நடைபெற்ற நிலையில் கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளது. வருகிற புதன்கிழமை முதல் வார நாட்கள் மட்டும் திருப்பள்ளி நடைபெறும் என்றும் ஞாயிற்றுக்கிழமை திருப்பள்ளி நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அரசு விதிமுறைப்படி பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர். குழித்துறை அருகே வெட்டு வன்னிப் பகுதியில் புனித அந்தோணியார் திருத்தலத்தில் காலை 8 மணி முதல் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் தாமிரபரணி நதி தொடங்கும் கரையோரத்தில் அமைந்துள்ள பாபநாசம் சிவன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் அதிகாலையிலிருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் குடும்பத்துடன் பேருந்துகளிலும், வேன், கார் போன்ற வாகனங்களிலும் வந்து தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில் வளாகத்தில் கிடாய் வெட்டி சமைக்கவோ , பொங்கல் வைக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வாகனங்களில் செல்லவும் நுபுர கங்கை தீர்த்தத்தில் தீர்த்தமாடவும் தற்காலிகமாக அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அழகர்கோவில் மலை மீதுள்ள பழமுதிர்ச்சோலை முருகன் திருக்கோவில் மற்றும் ராக்காயி அம்மன் திருக்கோவிலுக்கு பக்தர்களின் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.