மத்திய அரசின் சேவைத் துறையில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பெரம்பலூர் தொகுதி எம் பி பாரிவேந்தரின் கோரிக்கையை நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தாவத் சன்ஹிலால் பதில் அளித்துள்ளார். முதல் முறையாக மூன்றாம் பாலின வழக்கறிஞரான சத்யஸ்ரீ சர்மிளாவிற்கு புதிய தலைமுறையின் சக்தி விருது வழங்கும் விழாவில் துணிவுக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அந்த விழாவில் பேசிய பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் திருநங்கைகளுக்கு அரசு துறையில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்திருந்தார். அதன்படியே மக்களவையில் கடந்த மார்ச் 18ம் தேதி பேசிய அவர் அரசு சேவை துறையில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவத் ஜிகிலால், பாரிவேந்தர் எம் பி க்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில் திருநங்கைகள் நலன் காக்க திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம் 2019ல் கொண்டு வரப்பட்டது என்றும் அச்சட்டம் இந்த ஆண்டு ஜனவரி பத்தாம் தேதி அமல்படுத்த பட்டதாகவும் கூறியுள்ளார். மத்திய பட்டியலில் சமூக ரீதியாக பின்தங்கிய திருநங்கைகளுக்கு என தனியாக பிரிவை தொடங்கும்படி சம்மந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார். தங்களின் கோரிக்கையை ஏற்று அரசு சேவைத் துறையில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் பாடி வேந்தருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அமைச்சர் தாவல் ஜன்ஹிலால் தெரிவித்துள்ளார்.