சென்னையில் மேலும் 80 சதவீத மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய தொற்று நோயியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.கொரோனா பரவல் மற்றும் சமூக எதிர்ப்புத் திறன் ஆகியவற்றை கண்டறிய தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைந்து கள ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதற்கு சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 50 வார்டுகள் தேர்வு செய்யப்பட்டன. அங்கு வசிப்பவர்களில் 12 ஆயிரத்து 405 பேரிடம் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

அதன்பின் ஜூலை மாதம் 18ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பத்திற்கும் மேல் உள்ள அனைத்து வயதினரிடையே மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 2673 பேரின் உடலில் இம்மினோ குளோபுலின் நோய் எதிர்ப்புத் திறன் என்ற ஐஜிஜி ஆன்டிபாடி உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 50 தெருக்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 65 சதவிகித நபர்களுக்கு சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட நுரையீரல் பிரச்சினைகள் இருப்பது தெரியவந்துள்ளது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து வந்தாலும் மக்கள் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

8 கோடி பேர் வசிக்கும் தமிழகத்தில் வெறும் 12 ஆயிரம் நபர்களை மட்டுமே பரிசோதித்து விட்டு 20 சதவீதம் பேருக்கு எதிர்ப்பு திறன் வந்து விட்டதாக கூறுவது சரியானதாக இருக்காது என்பது மற்றொரு தரப்பின் வாதமாக இருக்கிறது.கொரோனாவால் அதிக பாதிப்புக்களை சந்தித்த அமெரிக்கா , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இதே போன்ற சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அங்கெல்லாம் வெறும் 5% மற்றும் 2% மட்டுமே நோய் எதிர்ப்புத் திறன் உண்டாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இச்சூழலில் சென்னையில் சோதனையின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதே நிபுணர்களின் கோரிக்கை.