Monday, September 28, 2020

70 ஆண்டுகளுக்கு பிறகு பலியான வீரர்களின் உடலை ஒப்படைத்த தென் கொரியா



கொரிய தீபகற்ப போரின் போது பலியான 117 சீன வீரர்களின் உடல்கள் தென் கொரியாவில் இருந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 1950 ஆம் ஆண்டு வடகொரியா தென்கொரியா இடையே போர் ஏற்பட்டது. மூன்று ஆண்டுகள் நடந்த இந்தப் போரில் தென் கொரியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், வடகொரியாவுக்கு ஆதரவாக சீனா, சோவியத் யூனியன் உள்ளிட்ட நாடுகளும் இருந்தன. இந்த போரில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான போர் வீரர்கள் பலியாகின.

இரு நாடுகளிலும் 25 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் அகதிகளானார்கள். கொரியப் போர் விளைவால் சுமார் 70 ஆண்டுகளாக தென் கொரியாவிற்கும் சீனாவிற்கும் பகை இருந்து வருகிறது. இந்த நிலையில் சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் போரில் இறந்த சீன வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தில் 2014 ஆம் ஆண்டு தென்கொரியா கையெழுத்திட்டது. அதன் படி கொரியப் போரில் உயிரிழந்த 599 சீன வீரர்களின் உடல்களை 7 ஆண்டுகளாக சீனாவிற்கு அனுப்பி வைத்து வருகிறது தென் கொரியா.

பலியானவர்களுக்கு சொந்தமான 1368 உடமைகளும் அனுப்பப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது 117 சீன வீரர்களின் எஞ்சிய உடல் பாகங்கள் நேற்று தென் கொரியாவில் இன்சியான் நகரில் இருந்து சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சீனாவில் உள்ள சென்யான் நகரில் உள்ள மார்டையஸ் பூங்காவில் பொதுமக்கள் முன்னிலையில் ராணுவ மரியாதையுடன் போர் வீரர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

Pages