43 பணியாளர்களுடன் 6000 பசுமாடுகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஜப்பானுக்கு அருகே கடலில் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நியூசிலாந்தின் நேப்பியர் நகரிலிருந்து சீனாவை நோக்கி புறப்பட்டது ஹல்ப் லைவ் ஸ்டாக் 1 என்ற கப்பல். சுமார் 6000 பசுமாடுகள் கப்பலில் அடைக்கப்பட்டிருந்தன. 43 பேர் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஜப்பானுக்கு அருகே கிழக்குச் சீனக் கடலில் வந்து கொண்டிருந்த போது கப்பலை 'நேசாக் புயல்' கடுமையாக தாக்கியது. உடனடியாக கப்பலில் இருந்து உதவிக் கோரி செய்தி அனுப்பப்பட்டது.

விரைந்து செயல்பட்ட ஜப்பானிய கடலோர காவல் படையினர் மீட்பு பணியை தொடங்கினார்கள். கப்பலை தேடியபோது ஒரே ஒரு நபர் மட்டும் உயிர்காக்கும் உடையை அணிந்தபடி கடலில் மிதந்து வந்தார். அவரை மீட்டு விசாரித்தபோது புயலில் தள்ளாடிய கப்பல் கடலில் கவிழ்ந்து பின்னர் மூழ்கிவிட்டதாக தெரிவித்தார். புயல் தாக்கியதும் உயிர்காக்கும் உடையை அனைவரும் அணியும்படி கப்பலின் தலைவர் உத்தரவிட்டதாகவும், ஆயினும் தன்னைத் தவிர வேறு யாரையும் தன்னால் பார்க்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார் ‌. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் கால்நடை ஏற்றுமதி மிகவும் லாபகரமான தொழில். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான கால்நடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் பெரிய வாகனங்களில் அடைக்கப்பட்டு இன்னொரு கப்பல்களில் ஏற்றப்படுகின்றன. தற்போது கடலில் மூழ்கியிருப்பதாக கருதப்படும் லைவ் ஸ்டாக் 1 என்ற கப்பலும் அவ்வகையைச் சேர்ந்தது. இதுபோன்ற கால்நடை ஏற்றுமதிக்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். பெரும்பாலான கப்பல்களில் கால்நடைகளை ஏற்றிச் செல்லும் வசதி இருப்பதில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். கடந்த நவம்பர் மாதத்தில் கருங்கடல் பகுதியில் கப்பல் கவிழ்ந்ததில் சுமார் 15000 ஆடுகள் கடலில் மூழ்கிவிட்டன.