டோலிவுட்டில் பிஸியாக இருந்து வரும் இளம் நடிகர் நானி. இவரின் நடிப்பில் கடையாக வெளியான ஜெர்ஸி, கேங்லீடர் ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்திருந்த நிலையில், இவரின் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் ‘வி’ படத்தை திரையில் வெளியிட முடியாத சூழல் உள்ள காரணத்தால் அமேசான் ப்ரைமில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அது படி படத்தின் வியாபாரமும் நல்ல விலைக்கு பேசி முடிக்கப்பட்டுள்ளதால் படம் வரும் செப்-5ம் தேதி ப்ரைமில் வெளியாகவுள்ளது.

காதல் த்ரில்லர் திரைப்படமான இதில், ஒரு காவல்துறை அதிகாரி, க்ரைம் எழுத்தாளர் ஒருவரைக் காதலிக்கிறார். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கும் வேளையில் ஒரு கொலைகாரன், அந்தக் காவல்துறை அதிகாரிக்கு புதிர் போட்டு அதற்கு பதிலளிக்கச் சொல்லி சவால் விடுகிறான். முதல் முறையாக நானி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தில், அவரது வில்லத்தனத்தைப் பார்க்க பார்வையாளர்கள் ஆவலுடன் உள்ளனர்.

மோகன் கிருஷ்ணா இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நிவேதா தாமஸ், அதிதி ராவ் ஹைதாரி, சுதீர் பாபு, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.