தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 லட்சத்தை நெருங்கி இருக்கிறது. 20 நாட்களுக்கு பிறகு சென்னையில் தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது சற்று ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. நாடு முழுவதும் இதுவரை 4.5 கோடிக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 50 லட்சத்திற்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த பரிசோதனையில் 11 சதவிகிதம் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரைகொரோனா பாதிப்பு 4.5 லட்சத்தை நெருங்கி உள்ளது. 3 லட்சத்து 86 ஆயிரத்து 173 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கும் நிலையில் 55 ஆயிரத்து 70 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழப்பு 7608 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 20 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகியிருக்கிறது. ஒரே நாளில் 968 பேருக்கு புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டங்களைப் பொருத்தவரை கோவை மற்றும் கடலூரில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் ஒரே நாட்களில் 593 பேர் கோரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் 378 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 258 பேரும், சேலம் மாவட்டத்தில் 214 பேரும், நெல்லை மாவட்டத்தில் 163 பேரும் ஒரே நாளில் வைரஸ் தொற்றிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.