2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற சி.பி.ஐ கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்திய அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆ.ராசா , கனிமொழி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்டோரை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு விடுதலை செய்தது.

இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐயும், அமலாக்கத் துறையும் கடந்த 2018 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர். மிக முக்கியமான வழக்கு என்பதால் விரைந்து விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ தரப்பில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தினசரி 2ஜி மேல்முறையீட்டு வழக்கு நடைபெறும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபிசைனி 7 ஆண்டுகளாக இவ்வழக்கை விசாரித்து வந்தார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு இருந்ததற்கான வலுவான ஆதாரங்களை தன்னிடம் யாராவது வழங்குவார்களா என 7 ஆண்டுகளாக காத்திருந்ததாகவும், தனது தீர்ப்பில் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் 4 லட்சம் பக்க ஆவணங்களைக் கொண்ட இவ்வழக்கை கையாண்ட இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் நீதிபதி ஓ பி சைனி தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.