அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லை என நீயூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் டிரம்ப் தரப்பு இதை முற்றிலுமாக மறுத்துள்ளது. ட்ரம்ப் அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபர் அதிபர் ஆவதற்கு முன்பே ரியல் எஸ்டேட், தங்கும் விடுதிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல வழிகளில் டிரம்ப்பிற்கு வருமானம் கிடைத்தது.

அமெரிக்க பெரும் பணக்காரர்களில் ஒருவரான டிரம்ப் 10 ஆண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை. டிரம்ப் அவரது நிறுவனங்கள் மற்றும் அவர் பங்குகள் வைத்திருக்கும் நிறுவனங்களின் கடந்த 20 ஆண்டுகால வருமான வரியை ஆய்வு செய்து தி நியூயார்க் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது தனக்கு தொழிலில் கிடைத்த வருமானத்தை விட நஷ்டம் அடைந்ததே அதிகமென ட்ரம்ப் பொய்க் கணக்கு காட்டி வருமான வரி செலுத்துவதிலிருந்து தப்பித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அதிபராக பொறுப்பேற்ற 2016 ஆம் ஆண்டு இந்திய மதிப்பில் சுமார் 56 ஆயிரம் ரூபாயை மட்டுமே வருமான வரியாகச் செலுத்தி உள்ளார். பொதுவாக அமெரிக்க அதிபர்கள் தங்களின் வருமானம் தொழில் வருவாய் விவரங்களை வெளியிடுவர்.

ஆனால் ட்ரம்ப் இதுவரை தனது வருவாய் குறித்த தகவல்களை வெளியிடவே இல்லை. இதனிடையே தான் வருமான வரி செலுத்தவில்லை என வெளியாகியிருக்கும் செய்தி போலியானது என தெரிவித்து இருக்கும் டிரம்ப் அரசுக்கு முறையாக வரி செலுத்தியதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய வருமானவரி அறிக்கைகள் அனைத்தும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். தன் மீது கலங்கம் கற்பிக்க என்ன கதைகளை வேண்டுமானாலும் உருவாக்குவார்கள் என்றும் டிரம்ப் ஆவேசமாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி வருகிறது விரைவில் டிரம்ப்பும் ஜோவை டனும் நேரடி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த சூழலில் ட்ரம்ப் வருமான வரி செலுத்தவில்லை என வெளியாகியிருக்கும் செய்தி விவாதத்தில் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.