பட்டியலின பிரிவினரிடையே உள் இட ஒதுக்கீட்டை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த சின்னையா என்பவர் கடந்த 2005 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். அதில் பட்டியலின பிரிவினருக்கான உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. அதை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உள் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என தீர்ப்பு வழங்கியது.

அந்தத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு பஞ்சாப்,ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் உள் இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் அருந்ததியினருக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றாக சேர்க்கப்பட்டு உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசனஅமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்கலாம் என்றும் அது அவர்களது அதிகாரம் சார்ந்த விஷயங்கள் என்றும் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அதிரடியாக கூறியுள்ளது.

ஒரு மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் இருக்கிறது என்றால் அந்த இட ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். 2005 ஆம் ஆண்டு உள் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றியமைக்க வேண்டியுள்ளது என்று கூறிய நீதிபதிகள் அதனை தங்களது 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு செய்ய முடியாது என்பதால் இந்த விவகாரத்தை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்விற்கு மாற்றுவதாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.